கட்டுரை

ரஜினி தொடங்க, கமல் ஆதரிக்க , புதுக்கட்சி!!

அசோகன்

தன் ரசிகர்களை சந்திப்பதற்காக ரஜினிகாந்த் நடத்திய ஐந்து நாள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஊடகங்களை வைத்துக்கொண்டு அவர் பேசிய பேச்சும் அவர் அரசியல் பற்றி குறிப்பிட்ட கருத்துகளும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடுமுழுக்க எதிர்வினைகளை உருவாக்கி உள்ளது. ஸ்டாலின் நல்ல நிர்வாகி, அன்புமணி நல்லவர், திருமாவளவன் போராளி, சீமான் நல்ல கருத்துகளைச் சொல்கிறார் என்றெல்லாம் சொன்னவர் ஆனால் சிஸ்டம் கெட்டுப்போயிருக்கே என்று உள்ள நிலவரத்தைச் சொன்னார்.

பல்வேறு தளங்களிலிருந்து ரஜினிக்கு எதிர்ப்பும் ஆதரவும் வருகையில் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் வந்துள்ளது. வாங்க.. எங்க கட்சிக்கு வாங்க என்று உடனே துண்டுபோட்டது பாஜகதான். ஏற்கெனவே தமிழிசை ரஜினிக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார். நரேந்திரமோடிகூட பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டபோதே சென்னைக்கு வந்தவர் ரஜினியின் இல்லம் தேடிச் சென்று சந்தித்தார். ஆனால் அப்போதும் ரஜினி எந்த பிடியும் கொடுக்கவில்லை. இப்போது ரஜினிக்கு கதவுகள் திறந்தே இருப்பதாகவும் ரஜினிதான் பாஜகவில் சேருவதை முடிவு செய்யவேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கூறி இருக்கிறார். ஆக இப்போது மூன்று கேள்விகள் இருக்கின்றன. 1) ரஜினி அரசியலுக்கு வருவாரா? 2) அவர் பாஜகவில் சேருவாரா? 3) தனிக்கட்சி ஆரம்பிப்பாரா?

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னால் தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. உயர்ந்த தலைவர்கள் இல்லாத மிகப்பெரிய வெற்றிடம். திமுக தலைவர் கருணாநிதியும் நலக்குறைவால் முடங்கிவிட்டதால் இந்த வெற்றிடம் மேலும் பூதாகரமாகி, பல்வேறு சக்திகள் ஆட்டிப்படைக்கும் வேட்டைக்காடாக காட்சியளிக்கும் நிலை. ரஜினியும் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவது பற்றிப் பேசிக்கொண்டே வருகிறார். அது ‘வுட்வார்ட்ஸ் கிரேப் வாட்டர்’ விளம்பரம்போல் ஆகிவிட்டதாக கிண்டல் அடிக்கும் நிலவரம். ரஜினி அரசியலுக்கு வர்றாரா? நான் குழந்தையா இருக்கும்போதும் அவர் வர்றதா  சொன்னார்.. என்று  ஒரு தரப்பினர் கிண்டல் விடுகிறார்கள். 1996-ல் ரஜினிக்கு நிஜமாகவே மக்கள் மனநிலை யொட்டிப்பேசியதால் ஒரு பெரிய ஆதரவு அலை  இருந்தது. ஆனால் இன்றைக்கு அது இருக்கிறதா என்பது கேள்விக்குறி. அன்றைக்கு இருந்த அரசியல் சூழலைவிட இன்று தமிழர் அல்லாதவர்களுக்கு எதிரான அமைப்புகள், கோஷங்கள் என்று தமிழ்நாட்டு அரசியல் கொஞ்சம் சூடாகவே இருக்கிறது. அதன் விளைவுதான், இப்போது ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புகளும் உரக்க ஒலிக்கின்றன. ஆனால் இந்த எதிர்ப்புக்கு வெகுஜன மக்கள் ஆதரவு இல்லை. அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அவர் அரசியல்களத்துக்கு வருவார் என்று பலரும் நம்புகிறார்கள்.

அவர் பாஜகவில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பவர்கள் நீண்டகாலமாக மத்தியில் பாஜக தலைவர்களுடன் அவர் நல்லுறவில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் காலூன்ற விருப்பத்தில் இருக்கும் பாஜக எப்படியாவது அவரை இழுக்கப்பார்க்கிறது. ஆனால் சுயமாக இயங்குவது என்றால் தனியாக இயக்கம் ஆரம்பித்தால்தான் முடியும் என்பதே அவர் தரப்பு எண்ணமாக இருக்கிறது. பல்லாண்டுகாலமாக தன்னை அரசியல் சார்ந்த மனிதராகவே காட்டிக்கொண்டு வந்திருக்கும் ரஜினி, தன் படம் ஒடுவதற்காக அது வெளியாகும் சமயத்தில் இப்படி சர்ச்சையைக் கிளப்புவார் என்ற ஒரு கருத்துக்கு ரஜினி ஏற்கெனவே ரசிகர்களுடன் பேசியபோது பதில்சொல்லிவிட்டார்: கதை நல்லா இருந்தால்தான் படம் ஓடும். இதுவரை நல்ல படங்களாகக் கொடுத்தேன். அதுதான் வெற்றிகரமாக ஓடின என்று! தனிக்கட்சி ஆரம்பிப்பது ஒரு நல்ல வழிதான் என்று அவர் யோசிக்கக் கூடும்.

பாஜகவின் இந்துத்துவ கொள்கைவாதத்தின் கனம் இன்றி செயல்படலாம். ஆனால் பொதுமக்கள்  மத்தியில் இருந்து எவ்வளவு ஆதரவு கிடைக்கும்?1996-ல் ரஜினி அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று துக்ளக்  பத்திரிகைக்காக சர்வே எடுத்ததாகவும் அப்போதே 75% பேர் அவர் அரசியலுக்கு வருவதற்கு எதிராக கருத்துக் கூறியதாகவும் சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் மணா எழுதி இருந்தார். அந்த கணிப்பு அப்போது வெளியிடப்படவில்லை! ஆனால் இந்த  கருத்துக்கணிப்புகளைத் தாண்டியது மக்கள் மனம். ஓர் ஆதரவு அலை எழுந்துவரும்போது அதைப் பலநேரங்களில் கணிக்க முடியாமல் போகும் என்று ரஜினி வருகையை எதிர்பார்க்கும் அரசியல்நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். முன்னெப்போதும் இல்லாத தலைமை வெற்றிடம் இப்போதிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் அவர்கள். “ ரஜினி தனிக்கட்சி தொடங்குவார். அதற்கு கமல்ஹாசன் ஆதரவு தருவார். சகல ஆசீர்வாதங்களும் இந்த இணைக்குத்தரப்படும்” என்று சொல்கிறார் தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒரு முக்கிய விமர்சகர்.

திராவிடக் கட்சிகளை சிதைந்துபோகச் செய்யும் நடவடிக்கையாக இதை தமிழகத்துக்கு வெளியே இருப்பவர்கள் நிகழ்த்த விரும்புவார்கள். ஆனால் தேசியவாதத்தை விட வலிமையாக இங்கே இயங்குவது தமிழ் அடையாள உணர்வாக வெளிப்படும் தமிழ் தேசியவாதம். ஏற்கெனவே இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக விஜயகாந்தை முன்னிறுத்தி மக்கள் நலக்கூட்டணியாக ஒராண்டுகளுக்கு முன்பாக தேர்தலை சந்திக்கும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. அறுபத்து ஆறு வயதில் தமிழ்நாட்டின் வெற்றிடத்தை நிரப்பும் தலைவராக ரஜினிகாந்த் தன்னை நிலைப்படுத்த தயாராக இருக்கிறாரா? அவர் சொன்ன போர் எப்போது தொடங்கும்? எப்போது ஆண்டவன் அவருக்கு  சமிக்ஞை அனுப்புவான்? இதெல்லாம் கேள்விகள்.ஆனால் ரஜினி என்ற மனிதர் எம்ஜிஆர் ஆகமுடியுமா?

கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட  வரிகள் இவை: வரலாறு முதல்முறை துயரமாகவும் மறுமுறை கேலிக்கூத்தாகவும் நிகழ்கிறது! இந்த வரிகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன் ரஜினி அரசியலை அணுகவேண்டும்.

என்ன செய்யவேண்டும் ரஜினி?

ரஜினியின் அரசியல் பிரவேசம் கிட்டத் தட்ட உறுதியாகி உள்ள சூழலில் அவர் செய்ய வேண்டிய பத்து விஷயங்களை முன் வைக்கிறோம். தலைவர்களின்  வார்த்தைகளோடு.

1.         செயலில் இறங்காமல் எங்கும் சென்றடையமுடியாது -மகாத்மா காந்தி

2.         மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கிருந்து அவர்கள் சென்றடையாத இடங்களுக்குக் கொண்டு செல்வதே ஒரு தலைவரின் பணி- ஹென்றி கிஸ்ஸிங்கர்.

தமிழகம் வீழ்ந்து கிடக்கும் மாநிலம் அல்ல. ஜிடிபியை அளவுகோலாக கொண்டால் இந்தியாவில் இரண்டாம் இடத்திலிருக்கிறது. உலகில் உள்ள நாடுகளில் 149 நாடுகளின் ஜிடிபி தமிழகத்தைவிட குறைவு. இன்றைய தமிழகத்தை எந்த புள்ளியிலிருந்து எந்த புள்ளிக்கு உயர்த்தப் போகிறீர்கள், அதை எப்படி செய்யப் போகிறீர்கள் என்பது பற்றிய திட்டம் என்ன?

3.         82 பேருடன் நான் புரட்சியைத் தொடங்கினேன். அதை மீண்டும் செய்வதென்றால் 10 அல்லது 15 பேருடன் முழு நம்பிக்கையுடன் செய்யத்தயார். - பிடல் காஸ்ட்ரோ

உங்கள் அரசியல் பாதையில் உடன் பயணிக்க போகும் உள்வட்ட குழுவில் (Core Team) யார் யார் இருக்கிறார்கள், அவர்களின் தகுதி என்ன?

4.         நிறைய எதிர்ப்பாளர்கள், சராசரி மனிதர்களுக்கு எதிராகச் செய்வதாக இருந்தாலும் கூட சரியான செயலைச் செய்வதே தலைமைப் பண்பு ஆகும். - என்.ஆர். நாராயணமூர்த்தி 

மனதிற்கு சரியென பட்டதை சொல்லும்போது எதிர்பாராத இடங்களிலிருந்து கிளம்பும் எதிர்ப்புகளை கையாள்வதற்கு தயாராகவேண்டும்.

5.         கொள்கையை உருவாக்கி தானும் செயல்படுத்தி மற்றவர்களையும் அதை பின்பற்றச் செய்யும் திறமைபடைத்தவர் தலைவர் ஆக்கப்படுகிறார் - எம்.ஜி.ஆர் 1953இல் திமுகவில் சேர்ந்து 1962ல் எம்எல்சி ஆகி 1967ல் எம்.எல்.ஏ. ஆகி 1972ல் கட்சி ஆரம்பித்த எம்ஜிஆரின் கொள்கைகள் ஒரு கட்சி சார்ந்து இருந்தன. ஆனால் ரஜினியின் கருத்துகள் இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

6)         நோக்கமும் திசையும் இல்லாவிட்டில் முயற்சிகளும் துணிச்சலும் பலனளிக்காது- ஜான் எஃப் கென்னடி

பயணிக்கப்போகும் திசையை அடையாளம் காட்டுவது அவசியம்.

7)  விமர்சனம் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம், ஆனால் தேவையானது.  உடலில் வரும் வலி போன்றது விமர்சனம். ஆரோக்கியம் குறைவானபோது கவனத்தைக் கோருகிறது. -வின்ஸ்டன் சர்ச்சில்.

முன்னெப்போதும் வராத தீவிரத்துடன் வரும் விமர்சனத்தை எதிர்கொள்ள வெண்டும்.

8)  பலவற்றுக்காக என்னைக் குற்றம் சாட்டினாலும் என் மோசமான எதிரிகள் கூட என்னை மனதில் பட்டதைப் பேச அஞ்சுபவன் என்று சொல்லமாட்டார்கள்.                 -லீ குவான் யூ

             தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளில் தங்களை ஆளப்போகும் நபரின் கருத்து என்ன என்பது மக்கள் அறிந்திருப்பது அவசியம்.

9)  தலைமைப்பண்பு என்பது அடுத்த தேர்தலைப் பற்றியது அல்ல; அடுத்த தலைமுறையைப் பற்றியது - சைமன் சினெக்

            அடுத்த தலைமுறை என்ன எதிர்பார்க்கலாம்?

10)      சிறந்த தலைவன் ஒரு குழந்தையைப் போல் தலைமையேற்க வேண்டும். குழந்தை மற்றவர்களைச் சார்ந்திருப்பதைப் போல் தோன்றினாலும் குடும்பத்தில் அதுதான் அரசனாக இருக்கிறது - விவேகானந்தர்.

இப்படியான தலைமைப்பண்புடன் யார் ஆட்சி செய்தாலும் தமிழகம் அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும்.

-அந்திமழை இளங்கோவன்

பீட்டர் அல்போன்ஸ் – காங்கிரஸ்

ரஜினி அரசியலுக்கு வரட்டும், அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் ஒரு தனிமனிதரால் ஒரு மிகப்பெரிய ஜனநாயகத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவது என்றெல்லாம் எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது. ஒரு மீட்பர் அல்லது மெசியா வருவார் என்று ஆன்மீகத்தில்தான் சொல்வார்கள். ஒருவேளை ஆன்மீகத்தில் அது சரிப்பட்டு வரலாம். ஆனால் தமிழ்நாடு போன்ற ஏழு கோடிப்பேர் வசிக்கின்ற இடத்தில் அவர் என்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறார்? இந்த சிஸ்டம் கெட்டுப்போயிருக்கிறது என்கிறார். இன்றைக்கு  உள்கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு என்று எல்லா விதங்களிலும் தமிழகம் பிரச்னையை எதிர் கொண்டுள்ளது. இதையெல்லாம் மாற்றி மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவர அவர் என்ன திட்டங்களை வைத்திருக்கிறார்? அவற்றை எல்லாம் மக்கள் முன்வைத்து விவாதத்துக்கு உட்படுத்தினார் என்றால் அவரை வரவேற்கலாம். ஆனால் இதற்கெல்லாம் அவருக்கு அவகாசம் இருப்பதாகத் தெரியவில்லை. போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் தயாராக இருங்கள் என்கிறார். இதெல்லாம் செய்து முடிக்க உதவியாக அவரிடம் என்ன குழு இருக்கிறது? அதில் இடம் பெற்றிருப்பவர்கள் யார்? அவர்களின் சமூகத்தகுதி என்ன என்பதையெல்லாம் அவர் முன்வைப்பாரேயானால் நாம் அவரைக் கைகூப்பி வரவேற்கலாம்!

ஜூன், 2017.